கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி: மாணவர்களுடன்,காணொலி காட்சி மூலம் சைலேந்திரபாபு கலந்துரையாடல்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
திருச்சி,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு வழிகாட்டுதல்படி, திருச்சி மத்திய மண்டல தீயணப்புத்துறைக்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டத்தில் கொரோனாவால் வீட்டில் முடங்கி கிடந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வும்ஏற்படுத்தி திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
5 வயது முதல் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்கள் முறையே பி.ஹரிணி(விழுப்புரம்), பி.ஜெயவர்ஷினி(திருச்சி), எஸ்.கே.முகுந்தன்(திருவாரூர்), ஆறுதல் பரிசு எஸ்.கலைச்செல்வன்(பெரம்பலூர்) ஆகியோர் பெற்றனர். 11 வயது முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஓவியப்போட்டியில் முதல் 3 இடங்கள் முறையே கே.ஷியாம்குமார்(தஞ்சாவூர்), வி.எஸ்.பரத்பிரியன்(கடலூர்), எஸ்.அக்ஷயாசுரேஷ்(திருச்சி) மற்றும் ஆறுதல் பரிசு எஸ்.கே.பரத்(புதுக்கோட்டை) ஆகியோர் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தீயணைப்புத்துறை திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பரிசுகளை வழங்கினார். மதியம் 12 மணிக்கு, அம்மாணவ-மாணவிகளுடன் தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது அவர், மாணவர்களிடம் கொரோனா வைரஸ் கண்ணுக்கும் தெரியுமா?, அதை எப்படி கண்டறியவது?, அதன் தாக்கம்-அறிகுறி என்னென்ன? என்று கேள்விகள் கேட்டார். அதற்கு மாணவர்கள் தரப்பில், எலக்ட்ரானிக் மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே கொரோனா வைரசை காணமுடியும் என்றும், சளி, இருமல் மற்றும் உடல் வெப்பநிலை(காய்ச்சல்)தான் அதன் அறிகுறி என்றும் பதில் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் கருணாகரன்(திருச்சி), பிரசன்னா(தஞ்சை), அனுசுயா(திருவாரூர்), முரளி(கடலூர்), பானுப்பிரியா(புதுக்கோட்டை) மற்றும் உதவி கோட்ட அலுவலர்கள் ராஜூ, சுரேஷ்கண்ணன், திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு அலுவலர் மெல்கியூராஜா உள்ளிட்ட நிலைய அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story