கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்


கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 6 Jun 2020 10:46 AM IST (Updated: 6 Jun 2020 10:46 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.

கடலூர்,

பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 108 தேர்வு மையங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக கடைசி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த தேர்வு வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே தேர்வு எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் 8 மையங்கள் அமைக்கப்பட்டது.

அதில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரத்தில் உள்ள 3 மையங்களில் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.

இதில் முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர் என 8 பேர் மட்டுமே ஒரு அறையில் அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டனர். மொத்தம் 1,800 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தபடி மையங்களுக்கு சென்றனர். மேலும் அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி அவ்வப்போது கைகளை சுத்தம் செய்தனர். முன்னதாக விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story