எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத ஹால்டிக்கெட் வினியோகம் பள்ளிகளிலேயே பதிவிறக்கம் செய்து வழங்கினர்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத ஹால்டிக்கெட் வினியோகம் பள்ளிகளிலேயே பதிவிறக்கம் செய்து வழங்கினர்
x
தினத்தந்தி 6 Jun 2020 11:03 AM IST (Updated: 6 Jun 2020 11:03 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா கட்டுக்குள் வராததால், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் நிலவியது. அதன்பிறகு தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதையடுத்து, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜூன் 4-ந் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும், இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோ, இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. ஆனால் கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் வினியோகிக்கப்படவில்லை.

ஹால்டிக்கெட் வினியோகம்

இந்நிலையில் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளின் ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து நேற்று முதல் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. இதன் ஒருபகுதியாக கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முக கவசம் அணிந்து வந்த மாணவர்கள், சமூக இடைவெளியுடன் நின்று ஹால்டிக்கெட்டுகளை வாங்கிச்சென்றனர். கரூர் மாவட்டத்தில் 6,162 மாணவர்கள், 6,079 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 386 பேர் என மொத்தம் 12,627 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதவுள்ளனர். இதற்காக 198 தேர்வு மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Next Story