சாராயம் காய்ச்சும் கலாசாரம் குறைந்தது: சட்டவிரோத மது விற்பனை அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கலாசாரம் குறைந்து சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கலாசாரம் குறைந்து சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது.
சாராயம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தபோது புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கலாசாரம் அதிகமாக இருந்தது. மதுபோதைக்கு அடிமையானவர்கள் சாராயத்தை குடிக்க தொடங்கினர். அவர்களது ஆவலை அறிந்து கொண்டவர்கள் ஆங்காங்கே சாராயம் காய்ச்சி, விற்க தொடங்கினர். போலீசார் அதிரடி வேட்டை நடத்தி சாராயம் மற்றும் ஊறல்களை கைப்பற்றி அழித்து வந்தனர். மேலும் சாராயம் விற்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒருவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்த நிலையில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறந்து மதுபானங்கள் விற்பனை தொடங்கிய பின் சாராயம் காய்ச்சும் கலாசாரம் குறைந்துள்ளது. சாராயம் காய்ச்சி விற்றதாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்குகள் சமீபத்தில் குறைய தொடங்கி உள்ளது.
சட்டவிரோதமாக மது விற்பனை
இதற்கிடையே மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தற்போது அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு அடைக்கப்படுகிறது. கடை திறப்பதற்கு முன்பாகவும், கடை அடைக்கப்பட்ட நேரத்திற்கு பின்பாகவும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு சிலர் விற்று வருவதாகவும், அது போன்ற நபர்களை பிடித்தால் ஒரு சில மதுபாட்டில்கள் மட்டுமே சிக்குவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கந்தர்வகோட்டை பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்ததோடு, 34 மதுபாட்டில்களை கைப்பற்றினர். மேலும் ரூ.4 ஆயிரத்து 730-ஐ பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story