திருப்பூரில் சீனக்கொடியை எரிக்க முயற்சி அர்ஜூன் சம்பத் உள்பட 25 பேர் கைது


திருப்பூரில் சீனக்கொடியை எரிக்க முயற்சி  அர்ஜூன் சம்பத் உள்பட 25 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2020 11:25 AM IST (Updated: 6 Jun 2020 11:25 AM IST)
t-max-icont-min-icon

இந்திய எல்லையில் சீனா தலையிடுவதை கண்டித்து திருப்பூரில் சீன கொடியை எரிக்க முயன்ற அர்ஜூன் சம்பத் உள்பட இந்து மக்கள் கட்சியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 

இந்திய எல்லையில் தலையிடும் சீனாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி(தமிழகம்) சார்பில் சீனாவை கண்டித்து ஆர்ப்பாட்டமும், கொடியை எரிக்கும் போராட்டமும், நேற்று காலை திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து போராட்டத்தை தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆனாலும் அறிவித்தபடி இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் தலைமையில் நிர்வாகிகள் சீன கொடியுடன் அங்கு வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தியவாறு திடீரென்று சீனகொடியை எரிக்க முயன்றனர். ஆனால் அந்த கொடியை எரிக்க விடாமல் போலீசார் தடுத்து பிடுங்கினர். மேலும் சீன பொருட்களையும் உடைக்க முயன்றபோது அவற்றையும் உடைக்க விடாமல் கைப்பற்றினார். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜூன்சம்பத் உள்பட 25 பேரை வடக்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வர்த்தக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

இதுகுறித்து அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறும்போது, “இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்கும், உள்நாட்டு வர்த்தகர்களை அழிக்கும் சீன வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்.இந்திய எல்லையில் வீரர்களை சீன வீரர்கள் தாக்குகிறார்கள். அவமதிக்கிறார்கள். லே, லடாக் பகுதியை ஆக்கிரமிக்கிறார்கள். பிரதமர் மோடி இந்திய ராணுவத்தின் துணையோடு சீன ஆக்கிரமிப்பை முறியடித்து வருகிறார். உலகம் முழுவதும் கொரோனா நோயை பரப்பி, அச்சுறுத்தலை சீனா ஏற்படுத்தி இருக்கிறது. சீனா தயாரிப்பு பொருட்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகிறது. மத்திய, மாநில அரசு சீனாவின் வர்த்தக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். சீனாவை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது ” என்றார்.

Next Story