குடும்ப வன்முறையில் இருந்து காக்க பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


குடும்ப வன்முறையில் இருந்து காக்க பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Jun 2020 11:32 AM IST (Updated: 6 Jun 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப வன்முறையில் இருந்து காக்க பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை திருப்பூரில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் இந்த சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது-

திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண்களுக்கான இலவச தொலைபேசி எண்.181 என்ற எண்ணைக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையம் மூலமாக மருத்துவம், பாதுகாப்பு இல்லம், சட்டரீதியான உதவிகள், உளவியல் ரீதியான உதவிகள் வழங்கப்படுகிறது. சமூக நலத்துறை அலுவலகத்தில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

160 வழக்குகள்

இந்த சேவை மையத்தில் இதுவரை குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக 86 வழக்குகள், குழந்தை திருமணம் தொடர்பாக 18 வழக்குகள், பிற வழக்குகள் 56 என மொத்தம் 160 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்குகளை மாவட்ட சமூக நல அதிகாரி மூலமாக விசாரித்து முடித்து வைக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் திருப்பூரில் நடைபாதையில் தங்கியிருந்த முதியவர்கள், பெண்கள், ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள், சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாதவர்கள் என 160 பேர் மீட்கப்பட்டு 2 பள்ளிகளில் 70 நாட்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

முதியோர் இல்லங்களில் 22 பேரும், மனநல காப்பகத்தில் 9 பேரும், இருப்பிடம் இல்லாமல் தவித்த 7 குடும்பத்தினர் என மொத்தம் 84 பேரை அவர்களின் உறவினர்களை கண்டறிந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 45 பேர் அவர்கள் வேலை செய்த பனியன் நிறுவனத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மையத்தை பெண்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகா, அரசு மருத்துவக்கல்லுரி டீன் வள்ளி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, மாவட்ட அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story