அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
மத்திய குழுவினர், கலெக்டர் ரத்னா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அரியலூர்,
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள புதுச்சேரி ஜிப்பர் மருத்துவக்கல்லூரி டாக்டர் தினேஷ்குமார் தலைமையிலான மத்திய குழுவினர், கலெக்டர் ரத்னா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியில் அரசு நடைமுறைப்படுத்தி வரும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும் மத்திய குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொது மக்களிடம் விழிப்புணர்வு உள்ளதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்.
மேலும் டாக்டர் தினேஷ்குமார் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று, அங்கு நோய் தொற்று உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் பற்றியும், அவர்களுக்கு எந்த வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன என்பதையும் கேட்டறிந்தார். பரிசோதனை நிலையம், காய்ச்சல் வார்டு ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செந்துறை தாலுகா பெரியாக்குறிச்சி கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து டாக்டர்களிடமும், மருத்துவ பணியாளர்களிடமும் கேட்டறிந்தார். அப்பகுதிகளில் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வரும் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை பார்வையிட்டு, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார்.
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் ரவிசங்கர், டாக்டர்கள் ரமேஷ், முகமது ரியாஷ், மணிகண்டன், தாசில்தார்கள் சந்திரசேகரன், முத்துகிருஷ்ணன் மற்றும் மருத்துவப்பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story