ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வீதம் 3 மாதத்திற்கு வழங்க வேண்டும்.
100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்கிட வேண்டும். குடிநீர் தட்டுப்பாடுள்ள கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். ரேஷன் வினியோக திட்டத்தில் மளிகை பொருட்கள் அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாதர் சங்க ஒன்றிய தலைவர்கள் ரங்கநாயகி, சுசீலா, ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெயங் கொண்டம் தாலுகா அலுவலகத்தில் கொடுத் தனர்.
இதேபோல் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சவுரிராஜன் தலைமையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாய மாவட்ட தலைவர் மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story