தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாறிய கோவில்பட்டி காந்தி மைதானம்


தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாறிய கோவில்பட்டி காந்தி மைதானம்
x
தினத்தந்தி 7 Jun 2020 3:00 AM IST (Updated: 7 Jun 2020 12:51 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி காந்தி மைதானம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்பட்டியில் நகராட்சி தினசரி சந்தை மூடப்பட்டது. இதனால் அங்கிருந்த காய்கறி கடைகள் கூடுதல் பஸ் நிலையம், வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.வி. மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டன. அங்கு பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி வந்தனர்.

இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனால் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.வி. மேல்நிலைப்பள்ளிகளிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதையடுத்து அங்கு செயல்பட்டு வந்த காய்கறி கடைகளை செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள காந்தி மைதானத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 64 கடைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. தற்போது காந்தி மைதானம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாறி உள்ளது.

அங்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். அங்கு குடிநீர் வசதி, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நகரசபை சார்பில் செய்யப்பட்டு உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்படும் என்று நகரசபை ஆணையாளர் ராஜாராம் தெரிவித்தார்.

Next Story