மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலத்தில் சீசன் தொடங்கியது - கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடிய அருவிக்கரை


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலத்தில் சீசன் தொடங்கியது - கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடிய அருவிக்கரை
x
தினத்தந்தி 6 Jun 2020 10:15 PM GMT (Updated: 6 Jun 2020 7:52 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. ஆனாலும் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

தென்காசி,

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் இங்கு சீசன் தொடங்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். இடையிடையே இதமான வெயிலும் அடிக்கும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும்.

இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். இந்த அருவிகளில் மருத்துவ குணம் இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் மனதிற்கு சந்தோஷத்தையும் கொடுக்கும். இந்த மாதங்களில் பெய்யும் மழையில் எவ்வளவு நேரம் நனைந்தாலும் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது. அதேபோன்று அருவிகளிலும் எவ்வளவு நேரம் குளித்தாலும் புத்துணர்ச்சி இருக்கும். 24 மணி நேரமும் ஆண்களும், பெண்களும் குளிக்கும் ஒரே இடம் குற்றாலம் மட்டும்தான்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே சாரல் மழை சற்று அதிகமாக பெய்தது. இதனைத்தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்திலும் சாரல் மழையுடன் இதமான சூழல் நிலவுவதால் சீசன் தொடங்கியுள்ளது.

இந்த ரம்மியமான சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவிக்க முடியாத நிலையில் குற்றாலம் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வர முடியாத சூழ்நிலை உள்ளது. அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் அருவிக்கரைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

குற்றாலத்தை மட்டுமே நம்பி தொழில் செய்துவரும் வியாபாரிகள், சுற்றுலா பயணிகளை அரசு அனுமதிக்குமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமூக இடைவெளியில் அருவிகளில் குளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story