சாலையை சீரமைக்க வலியுறுத்தி நடுரோட்டில் படுத்து ஆஸ்டின் எம்.எல்.ஏ. போராட்டம் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு
சாலையை சீரமைக்க வலியுறுத்தி நடுரோட்டில் படுத்து ஆஸ்டின் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்தாமரைகுளம்,
சாலையை சீரமைக்க வலியுறுத்தி நடுரோட்டில் படுத்து ஆஸ்டின் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை சீரமைப்பு
குமரி மாவட்டம் கரும்பாட்டூர் பஞ்சாயத்தில் கரும்பாட்டூர் ரேஷன் கடைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக கிடந்தது. இதை சீரமைக்க அகஸ்தீஸ்வரம் யூனியன் பொதுநிதியில் இருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலை சீரமைக்கும் பணி நேற்று காலை தொடங்குவதாக இருந்தது.
இதனை அறிந்த ஆஸ்டின் எம்.எல்.ஏ. பழுதான சாலை பகுதிக்கு வந்தார். எம்.எல்.ஏ. வந்தவுடன் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி, கரும்பாட்டூர் ஊர் நிர்வாகி தினகரன், சோட்டப்பணிக்கன் தேரிவிளை ஊர்த்தலைவர் சிவபெருமான், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ், கரும்பாட்டூர் ஊராட்சி செயலாளர் மணி உள்பட ஏராளமான தி.மு.க.வினரும், அந்த பகுதி மக்களும் அங்கு வந்தனர்.
யூனியன் தலைவர் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், கவுன்சிலர் பால்தங்கம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆஸ்டின் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர், பொதுமக்களிடம் இன்னொருநாள் சாலைப்பணியை தொடங்கலாம் என்று கூறினர்.
அதற்கு ஆஸ்டின் எம்.எல்.ஏ., நீண்ட நாட்கள் கழித்து இந்த சாலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுகிறது. எனவே சாலைபணியை இன்றே தொடங்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டம்
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. உடனே எம்.எல்.ஏ. உள்பட அங்கு திரண்டு நின்றவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், கிராம நிர்வாக அதிகாரி ஜெயா கவிதா ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்கள், நடுரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த பலனும் ஏற்படவில்லை. உடனே போலீசார் நீங்கள் கலைந்து செல்லவில்லை என்றால் கைது செய்ய போகிறோம் என்றனர்.
குண்டுக்கட்டாக...
உடனே ஆஸ்டின் எம்.எல்.ஏ. சாலைப்பணியை தொடங்க வேண்டும் என்று கூறி நடுரோட்டில் படுத்து போராட்டம் நடத்தினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை எழுந்திருக்கும்படி கூறினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபடி இருந்தார். உடனே போலீசார், எம்.எல்.ஏ.வை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் பின்னர் எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 14 பேரையும் கைது செய்தனர். கைது செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்தாமரைகுளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story