செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 சிறுவர் சிறுமிகள் உள்பட 95 பேருக்கு கொரோனா


செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 சிறுவர் சிறுமிகள் உள்பட 95 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Jun 2020 5:10 AM IST (Updated: 7 Jun 2020 5:10 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 சிறுவர், சிறுமிகள் உள்பட 95 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பாலகிருஷ்ணன் தெரு, நேரு நகர் பகுதியில் வசிக்கும் 30 வயது இளம்பெண், சிங்கபெருமாள்கோவில் அடுத்த செங்குன்றம் பெரிய தெருவில் வசிக்கும் 33 வயது வாலிபர், வண்டலூர் ஊராட்சியில் நடேசன் தெரு, ரத்தினம் நகரில் வசிக்கும் 30 வயது வாலிபர், காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள கோகுலம் காலனி விரிவு பகுதியில் வசிக்கும் 26 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

கூடுவாஞ்சேரி வேதாச்சலம் நகரில் வசிக்கும் 5 வயது சிறுமி, மறைமலைநகர் நக்கீரன் நகர் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமி, மேலும் 1 வயது பெண் குழந்தை, ஒன்றரை வயது ஆண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை, 4 வயது சிறுவன் உள்பட 12 சிறுவர், சிறுமிகள் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன் தினம் வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,719 ஆனது. இவர்களில் 763 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை முருகாத்தம்மன் பேட்டை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 35 வாலிபர், சோமங்கலம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 ஆனது. இவர்களில் 309 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்தனர். 187 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ரங்கய்யபள்ளி கிராமத்தை சேர்ந்த மாவுமில் உரிமையாளர் வாத நோய்க்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இவருக்கு உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற சென்றார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு வாடகை காரில் அழைத்து சென்ற 2 கார் டிரைவர்களும், மாவுமில் உரிமையாளர் மனைவி, மகள், மகன் ஆகிய 5 பேரும் கொரோனா பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவருடன் சேர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் 79 நேற்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,274 ஆனது. இவர்களில் 668 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 11 பேர் உயிரிழந்தனர். 595 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story