2019-20-ம் ஆண்டில் கர்நாடகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.4,314 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது- முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


2019-20-ம் ஆண்டில் கர்நாடகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.4,314 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது- முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2020 6:16 AM IST (Updated: 7 Jun 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

2019-20-ம் ஆண்டில் கர்நாடகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.4,314 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

கடந்த முறை நடந்த வணிக வரித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் நான், போலி மின்னஞ்சல் ரசீதுகள், சரக்கு போக்குவரத்துக்கு வழங்கப்படும் காலஅவகாசம் போன்றவை தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்திருப்பதாகவும், அவற்றை தடுக்க வணிக வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டேன்.

மேலும் சாலை வாகன கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை 77-ல் இருந்து 116 ஆக அதிகரிக்கப்பட்டது. அந்த குழுக்கள் 2.89 லட்சம் சரக்கு வாகனங்கள் மற்றும் 7.46 லட்சம் மின்னஞ்சல் ரசீதுகளை பரிசீலனை நடத்தின. இதில் சுமார் 300 முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் வரி, அபராதமாக ரூ.6.21 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதை நான் பாராட்டுகிறேன். மேலும் ரூ.40 லட்சத்திற்கு அதிகம் வணிகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் பெரிய நகரங்களில் மாதம் ரூ.20 லட்சம் வாடகை வசூலிக்கும் வணிக வளாகங்கள் குறித்து அதிகாரிகள் தகவல்களை சேகரிக்க வேண்டும்.

மத்திய அரசு 2019-20-ம் ஆண்டில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை 3 மாதங்களுக்கு சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) இழப்பீடு ரூ.4,314 கோடியை விடுவித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் மீதான வரி வருவாய் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு எடியூப்பா பேசினார்.

இதில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, முதல்-மந்திரியின் கூடுதல் தலைமை செயலாளர் ரவிக்குமார், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஐ.எஸ்.என்.பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story