குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரை


குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரை
x
தினத்தந்தி 7 Jun 2020 6:20 AM IST (Updated: 7 Jun 2020 6:20 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்புசெல்வன் அறிவுறுத்தினார்.

அண்ணாமலைநகர், 

குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்புசெல்வன் அறிவுறுத்தினார்.

குடிமராமத்து பணி

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் உள்ள குழந்தைவேலு பாசன வாய்க்கால் மற்றும் தெற்கு பிச்சாவரம் பகுதியில் உள்ள வாய்க்கால் ஆகியவற்றில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அங்கிருந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர் ரமேஷ், கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கண்ணன், விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க செயலாளர் ரவீந்திரன், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்க சிவசங்கரன், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஸ்ரீதரன், பாலகுமார், சாமிதுரை உள்பட பலர் உடனிருந்தனர்.

30-ந் தேதிக்குள் முடிக்க...

பின்னர் கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வருகிற 12-ந் தேதி தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பெருமாள் ஏரியில் இருந்து தண்ணீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த ஏரி மூலம் சுமார் 8 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும். மேலும் ஏரியில் பழுதடைந்துள்ள 11 மதகுகளும் ரூ.4 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு குடிமராமத்து பணிகளுக்காக ரூ.9.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 162 பாசன வாய்க்கால்கள், 17 ஏரிகள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதனால் கூடுதலாக 8ஆயிரத்து 960 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். வருகிற 30-ந் தேதிக்குள் குடிமராமத்து பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Next Story