திண்டுக்கல்லில் போக்குவரத்து நெரிசல்: சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்த புதிய நடைமுறை


திண்டுக்கல்லில் போக்குவரத்து நெரிசல்: சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்த புதிய நடைமுறை
x
தினத்தந்தி 7 Jun 2020 6:46 AM IST (Updated: 7 Jun 2020 6:46 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு புதிய நடைமுறையை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு புதிய நடைமுறையை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகளின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக அந்த சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் தற்போது புதிய நடைமுறையை கையாண்டு வருகின்றனர்.

அதன்படி முக்கிய சாலைகளில், ஒவ்வொரு மாதமும் இரட்டை படையில் வரும் தேதிகளில் (அதாவது 2, 4, 6, 8 உள்ளிட்ட தேதிகள்) சாலையின் இடதுபுறமும், ஒற்றைப்படையில் வரும் தேதிகளில் (அதாவது 1, 3, 5, 7 உள்ளிட்ட தேதிகள்) சாலையின் வலதுபுறமும் இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும் என்பது தான் அந்த புதிய நடைமுறை.

பழனி சாலையில்...

இதுகுறித்து திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமாரிடம் கேட்டபோது, போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் தற்போது முதற்கட்டமாக திண்டுக்கல்-பழனி சாலையில் கல்லறை தோட்டம் பகுதியில் இருந்து வாணிவிலாஸ் சிக்னல் வரை சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை ஒற்றைப்படை, இரட்டைப்படை தேதிகளின் அடிப்படையில் சாலையின் வலதுபுறம் அல்லது இடதுபுறம் மட்டுமே நிறுத்தும்படி அறிவுறுத்துகிறோம். இப்படி செய்வதால் சாலையின் ஒருபுறத்தில் மட்டுமே இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. மற்றொருபுறம் இரு சக்கர வாகனங்கள் இல்லாததால் அந்த வழியாக செல்லும் கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சென்றுவர முடியும். மேலும் தினமும் அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் தேதி அடிப்படையில் வலது, இடதுபுறத்தில் நிறுத்தப்படுவதை கண்காணித்து வருகிறோம். இதுதொடர்பாக அந்த சாலையில் அறிவிப்பு பலகையும் வைத்துள்ளோம் என்றார்.

Next Story