வளர்க்க முடியாததால் பெண் குழந்தையை தத்து கொடுத்ததாக தம்பதி மீது புகார் போலீசார் விசாரணை
வளர்க்க முடியாததால் பெண் குழந்தை தத்து கொடுத்ததாக தம்பதி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை,
வளர்க்க முடியாததால் பெண் குழந்தை தத்து கொடுத்ததாக தம்பதி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளர்க்க முடியவில்லை
மதுரை சமூகநல பாதுகாப்பு, குழந்தைகள் நலக்குழு உறுப்பினராக இருப்பவர் பாண்டியராஜா. இவர் செல்லூர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
சைல்டு லைனுக்கு நேற்று காலை ஒரு அழைப்பு வந்தது. அதன் பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு பணியாளர்கள் மாலதி, அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் செல்லூர் 50 அடி ரோடு பகுதியில் வசித்து வருபவர் லாரி டிரைவர் ராபர்ட். இவரது 2-வது மனைவி மேரி(வயது 28). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை அவர்களால் வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.
தத்து கொடுப்பு
இந்தநிலையில் செல்லூர் போஸ் வீதியை சேர்ந்த ஷாஜகான், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நாகூர்அம்மாள்(42). இவர்களுக்கு திருமணம் முடிந்து 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. எனவே அவர்கள் ராபர்ட், மேரியிடம் பெண் குழந்தையை தாங்கள் வளர்த்து கொள்வதாக அணுகினார்கள். அதை தொடர்ந்து இருதரப்பினரும் வக்கீல் ஒருவரை அணுகி அவரது முன்னிலையில் 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டு எழுதி வாங்கினர். பின்னர் மேரி தனது பெண் குழந்தையை நாகூர்அம்மாளிடம் கொடுத்துள்ளார்.
இது அரசு சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறியுள்ளார்.
பணம் கைமாறியதா?
அதன்பேரில் செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு பணியாளர்கள் அவர்கள் 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் மேரியினால் முதல் குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதற்கிடையில் 2 குழந்தையை பிறக்க இருந்த போது நாகூர்அம்மாள் தான் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்துள்ளார்.
தன் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக மேரி குழந்தையை தத்து கொடுத்துள்ளார். ஆனால் பிறந்த குழந்தை என்பதால் சில மாதங்கள் அந்த குழந்தை தாயிடம் தான் இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் தான் நாகூர்அம்மாளிடம் அவர் குழந்தையை கொடுத்தது தெரியவந்தது. ஆனாலும் குழந்தையை தத்து கொடுத்ததில் பணம் ஏதும் கைமாறி உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முகாமில் ஒப்படைப்பு
இதற்கிடையில் குழந்தைகள் நல பாதுகாப்பு பணியாளர்கள் மேரியின் 3 வயது ஆண் குழந்தை மற்றும் 9 மாத பெண் குழந்தையை மீட்டு கருமாத்தூரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story