சேலத்தில் பரபரப்பு காதல் மனைவிக்கு 2-வது திருமணம் செய்ய முயற்சி குழந்தையுடன் கட்டிட மேஸ்திரி கதறல்
காதல் மனைவிக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக அவரது கணவரான கட்டிட மேஸ்திரி குழந்தையுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கதறி அழுதபடி புகார் தெரிவித்தார்.
சேலம்,
காதல் மனைவிக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக அவரது கணவரான கட்டிட மேஸ்திரி குழந்தையுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கதறி அழுதபடி புகார் தெரிவித்தார்.
காதல் திருமணம்
சேலம் மாவட்டம் பூலாவரி ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் பூபதிராஜன் (வயது 25). கட்டிட மேஸ்திரியான இவர், சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த கட்டுமான வேலைக்காக அங்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். அது நாளடைவில் காதலாக மாறியது.
இதனிடையே கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு பூபதிராஜன்-மகாலட்சுமி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு அவர்கள் அங்கேயே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தற்போது ஒரு வயதில் சந்துரு என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பூபதிராஜனை அவரது மாமனார் மற்றும் உறவினர்கள் சித்ரவதை செய்து வீட்டில் இருந்து வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.
2-வது திருமணம்
மேலும் மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைக்கவும் முயற்சி நடந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சிதம்பரத்தில் இருந்து பூபதிராஜன் தனது ஒரு வயது குழந்தையுடன் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் கண்ணீர் மல்க அங்கிருந்த போலீசாரிடம் தனது காதல் மனைவிக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதாகவும், எனவே அவரை என்னோடு சேர்த்து வைக்க வேண்டும் எனக்கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதைடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து பூபதிராஜன் கூறியதாவது:-
நான் சிதம்பரத்தில் கட்டிட வேலை செய்த போது அதே ஊரை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் எனது மாமனார் மற்றும் குடும்பத்தினர் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டு எனது மனைவிக்கு வேறு ஒருவருடன் 2-வது திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள்.
சேர்த்து வைக்க வேண்டும்
இது பற்றி அவர்களிடம் கேட்டபோது என்னை அடித்து துரத்திவிட்டனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையுடன் பூலாவரி ஆத்துக்காடுக்கு வந்து விட்டேன். சிதம்பரத்தில் எனது மனைவியை ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் நேற்று சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story