சொந்த ஊர்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் படையெடுப்பு: திருப்பூரில் 1000 வாடகை வீடுகள் காலி


சொந்த ஊர்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் படையெடுப்பு: திருப்பூரில் 1000 வாடகை வீடுகள் காலி
x
தினத்தந்தி 7 Jun 2020 9:42 AM IST (Updated: 7 Jun 2020 9:42 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வசித்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பூரில் 1000 வாடகை வீடுகள் காலியாக உள்ளன.

திருப்பூர்,

திருப்பூரில் வசித்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பூரில் 1000 வாடகை வீடுகள் காலியாக உள்ளன.

சொந்த ஊருக்கு படையெடுப்பு

திருப்பூர் மாவட்டத்தில் பீகார், ஒடிசா, அசாம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 2 லட்சம் பேர் உள்ளனர். இதில் திருப்பூர் மாநகரில் மட்டும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தற்போதும் ஏராளமானோர் தங்கள் ஊர்களுக்கு செல்ல திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

காலியாக இருக்கும் வீடுகள்

குறிப்பாக திருப்பூர் மாநகரில் இருந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு ஊர்களுக்கு சென்று உள்ளதால் திருப்பூரில் கல்லம்பாளையம், ராயபுரம், தென்னம்பாளையம், அனுப்பர்பாளையம், கொங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகை வீடுகள் காலியாக உள்ளன. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதமாக வாடகை வீட்டின் உரிமையாளர்களுக்கு சரிவர கிடைக்காத நிலையில் தற்போது வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூருக்கு எப்போது திரும்புவார்கள் என்பதும் தெரியாத நிலை இருப்பதால் வீட்டு உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.

வழிமேல் விழி வைத்து

வீட்டை காலி செய்தவர்கள் திரும்பி வரும் வரைக்கும் மின்கட்டணம், குடிநீர் கட்டணம், பராமரிப்புச் செலவு என அனைத்தையும் வீட்டு உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக வாடகையை மட்டுமே நம்பியுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பல வாடகை வீடுகளில் பூட்டு தொங்குவதால் மாநகரின் பல இடங்களில் வீடு வாடகைக்கு என்ற விளம்பரங்கள் அதிக அளவில் இருப்பதைக் காண முடிகின்றது. சொந்த ஊருக்கு சென்றவர்கள் எப்போது திருப்பூர் திரும்புவார்கள் என வழிமேல் விழிவைத்து வீட்டு உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். வீட்டு வாடகைக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் யாராவது வருவார்களா? எனவும் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story