விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்


விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2020 9:46 AM IST (Updated: 7 Jun 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுக்கம்பாறை,

விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செயற்கை சுவாசம்

வேலூரை அடுத்த ஊசூர் அருகில் உள்ள வீராரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 22), தனியார் பஸ் கண்டக்டர். ஊரடங்கால் வேலையின்றி அவர் வீட்டில் இருந்தார். கடந்தசில நாட்களுக்கு முன்பு ஏழுமலையை, அவருடைய தந்தை திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர் 4-ந்தேதி விஷத்தை குடித்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஏழுமலை பழைய நிலைக்கு திரும்பி குடும்பத்தினருடன் பேசினார்.

இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்போவதாகக் கூறினர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் டாக்டர்கள் வழக்கம்போல் ஏழுமலைக்கு ஊசி போட்ட உடன், அவரின் சுய நினைவு மாற தொடங்கியதாகத் தெரிகிறது.

உடனே அவரின் பெற்றோர், அங்கிருந்த டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஏழுமலையை பரிசோதித்த டாக்டர்கள் அவரின் உடல்நிலையில் மாற்றம் வந்துள்ளதாக கூறி, செயற்கை சுவாசம் உள்ளிட்ட உபகரணங்களை பொருத்தினர். அந்தச் செயற்கை சுவாச எந்திரம் சரிவர வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாக்டர்கள் கவனக்குறைவால் சிகிச்சை அளித்ததுடன், செயற்கை சுவாசம் சரிவர வேலை செய்யாததே ஏழுமலையின் சாவுக்கு காரணம் எனக்கூறி, அவரின் உறவினர்கள் 70-க்கும் மேற்பட்டோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சூழ்ந்து முற்றுகையிட்டனர்.

அவருக்கு சிகிச்சை அளித்த முறைகள் குறித்து டாக்டர்கள் விளக்கம் அளிக்கும் வரை, பிணத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி, மருத்துவமனை முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு, பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிகிச்சை முறைகள் குறித்து பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பின்னரே விவரம் தெரிய வரும். அதுவரை நீங்கள் பொறுமையாக இருங்கள் எனப் போலீசார் கூறினர். இதையடுத்து ஏழுமலையின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பிணத்தை வாங்கி சென்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story