வேலூர் சாய்நாதபுரத்தில் கொரோனா பரவலை தடுக்க தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’ மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
வேலூர் சாய்நாதபுரத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வேலூர்,
வேலூர் சாய்நாதபுரத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மருத்துவமனைக்கு ‘சீல்’
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வேலை செய்த டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவருடன் தொடர்புடையவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த டாக்டர் வேலூர் ஆரணி சாலை பலவன்சாத்துகுப்பத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பகுதி நேர டாக்டராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. அவர் அங்கிருந்த உள் மற்றும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் அந்த டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான பிறகு அவர் பகுதி நேர டாக்டராக வேலைபார்த்த மருத்துவமனை நிர்வாகம் அங்கிருந்த உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ததாக மாநகராட்சி கமிஷனர் சங்கருக்கு தெரிய வந்தது.
பின்னர் மாநகராட்சி கமிஷனர் சங்கர் தலைமையில் 3-வது மண்டல உதவி கமிஷனர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை செய்தனர். அதில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மருத்துவமனை மூலம் பிறருக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் அந்த மருத்துவமனையை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவவீரர்
இதனிடையே நேற்று முன்தினம் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் ஒருவர் மருந்துக்கடை உரிமையாளரின் தாயார், மற்றொருவர் ராணுவவீரர் என்பதும் தெரியவந்தது.
அதுகுறித்த விவரம் வருமாறு:-
வேலூர் ஆற்காடு சாலையில் மருந்துக்கடை நடத்தி வந்தவருக்கு பாதிப்பு ஏற்பட்டவுடன் அவரின் குடும்பத்தினர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவரின் மருந்துக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள், நெருங்கிய தொடர்புடையவர்கள் பென்லேன்ட் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மருந்துக்கடை உரிமையாளரின் தாயாருக்கு பரவியது தெரியவந்தது.
இதேபோல, கொணவட்டத்தை சேர்ந்த 32 வயது ராணுவ வீரர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வந்தவர். ஊருக்கு திரும்பியபோது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அரசமரப்பேட்டை பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளனர். இனி வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story