போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி திருவெண்காடு போலீஸ் நிலையம் மூடப்பட்டது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி திருவெண்காடு போலீஸ் நிலையம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 7 Jun 2020 10:56 AM IST (Updated: 7 Jun 2020 10:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில், காவலர் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவெண்காடு, 

சென்னையில், காவலர் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பணிபுரிந்து வந்த திருவெண்காடு போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு தொற்று

நாகை மாவட்டம் திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 55 வயதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், கடந்த மாதம் 29-ந் தேதி சென்னை வீராபுரத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு வகுப்பு எடுப்பதற்காக சென்றார். அங்கு அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் வாடகை கார் மூலம் கடந்த 2-ந் தேதி ஊருக்கு வந்தார். பின்னர் அவர், மறுநாள் காலை முதல் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரும், அவருடன் தங்கியிருந்த 26 வயதான உறவினரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவு வந்ததில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

போலீஸ் நிலையம் மூடப்பட்டது

இதேபோல் பூம்புகார் அருகே வெள்ளையனிருப்பு பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வந்தார். சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் போலீஸ் நிலையம், காவலர் குடியிருப்புகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டருடன் பணிபுரிந்த போலீசாருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணிபுரிந்து வந்த திருவெண்காடு போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

Next Story