பொள்ளாச்சி, உடுமலைக்கு செல்ல உக்கடம் பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்
கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலைக்கு செல்ல உக்கடம் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கோவை,
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் மண்டலங்களுக்குள் மட்டும் பஸ்போக்குவரத்து கடந்த 1-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. நோய் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப் படுகிறது.
60 சதவீத பயணிகளை மட்டும் பஸ்சில் ஏற்றுமாறு கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருவர் அமரும் இருக்கையில் ஒருவரும், 3 பேர் அமரும் இருக்கையில் 2 பேரும் அமர்ந்து பயணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டவுன் பஸ்களில் 25 பேர் அமர்ந்தும், 5 பேர் நின்று கொண்டு பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம், காய்ச்சல் பரிசோதனை, கிருமி நாசினி பயன்படுத்தப்பட்ட பின்னரே பஸ்சுக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கேள்விக்குறியான சமூக இடைவெளி
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வேலை மற்றும் தொழில் சம்பந்தமாக பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். இதற்கிடையே, கோவை உக்கடம் பஸ்நிலையத்தில் பொள்ளாச்சி, உடுமலை செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அனைவரும் வரிசையாக நிறுத்தப்பட்டனர்.பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தாலும் சமூக இடைவெளியை அவர்கள் பின்பற்றவில்லை. ஒருவர் பின் ஒருவராக நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பஸ்களும் குறைவாக இயக்கப்படுவதால், நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
தடையை மீறி பயணம்
மேலும் பஸ்களில் விதிகளை மீறி 2 பேர் அமரும் இருக்கையில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்ததால், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை கேள்விக்குறியாகி உள்ளது. பிற மண்டலத்துக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அவசர தேவைக்காக செல்ல இ-பாஸ் கட்டாயம். ஆனால் இ-பாஸ் எடுக்காமல் வரும் பயணிகள் மண்டல எல்லையில் இறக்கிவிடப்படுகிறார்கள்.
பின்னர் அவர்கள் தடையை மீறி அங்கிருந்து கிராம சாலைகளை பயன்படுத்தி பிற மண்டலத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்து இருப்பதால், போதிய போக்குவரத்து வசதிகளை அரசு அனுமதியுடன் செயல்படுத்துமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story