மீன், காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது சமூக இடைவெளி காணாமல் போனது
கோவை மீன், காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு அதிகளவில் பொதுமக்கள் குவிந்ததால் சமூக இடைவெளியும் காணாமல்போனது.
கோவை,
கொரோனா தொற்று பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள்,
துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோவை மாவட்டத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 145 பேர்
குணமடைந்துவிட்டனர்.
நைசாக ஊடுருவல்
வெளிமாவட்டங்களில் இருந்து கோவை எல்லை வரை வேறு வாகனங்களில் வந்து, அங்கிருந்து உறவினர்களின் இருசக்கர
வாகனங்கள் மூலம் மாவட்டத்துக்குள் வருவதாகவும், சென்னையில் இருந்து கோவை மாவட்ட பதிவு எண் கொண்ட கார் உள்ளிட்ட
வாகனங்களில் நகருக்குள் நைசாக ஊடுருவுவதாகவும் கூறப்படுகிறது.
வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க இந்த ஊடுருவல்
சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடமும் புகார் செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட
எல்லைப்பகுதியில் உள்ள 14 சோதனைச்சாவடிகளையும் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
காணாமல்போன சமூக இடைவெளி
கோவை லாரிப்பேட்டையில் மொத்த மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு காலையிலேயே வியாபாரம் முடிந்துவிடும். இந்தநிலையில்
நேற்று லாரிபேட்டை மொத்த மீன்மார்க்கெட்டில் சில்லரையாகவும் மீன் விற்பனை செய்ததால் பொது மக்கள் கூட்டம்
அலைமோதியது. போதிய சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படவில்லை. அது காணாமல்போனது.
மீன் வாங்குவதற்கு ஏராளமானவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து அந்த பகுதியில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசலும்
ஏற்பட்டது. உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலையில் சில்லரை மீன் மார்க்கெட் செயல்படும் நிலையில் லாரி பேட்டையிலும்
சில்லரை விற்பனை நடைபெறுவதால் பாதிப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தி செயல்பட்டு வரும் நிலையில் லாரி பேட்டையில் சில்லரை விற்பனையை தடை
செய்தால் மட்டுமே நெரிசல் குறையும் என்று அதிகாரிகளுக்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டு இருப்பதாக உக்கடம் சில்லரை மீன்
மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். அதுபோன்று காய்கறி மார்க்கெட்டுகள் மற்றும் முக்கிய கடைவீதிகளிலும் நேற்று அதிக
எண்ணிக்கையில் கூட்டம் காணப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
முழு ஒத்துழைப்பு
பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால் ரூ.100
அபராதம் விதிக்கப்படும். அதுபோன்று சமூக இடைவெளி மிகமுக்கியம் ஆகும். இதை கடைபிடிக்காவிட்டால் மாவட்டம் முழுவதும்
தொற்று பரவும் அபாயம் ஏற்படும்.
எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து பொது இடங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்
கவனம் செலுத்த வேண்டும். மேலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் பொது
இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story