நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது 2 இடங்களில் மண் சரிவு
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள கேரளாவில் மழை பெய்ய தொடங்கியதும், நீலகிரியிலும் மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழையுடன் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்.
கடுங்குளிர்
மலைப்பிரதேசமான ஊட்டியில் மழையால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் வீட்டில் இருந்தாலும் கம்பளி ஆடைகள் அணிந்தபடியே மக்கள் உள்ளனர். பகலில் மழை பெய்யாமல் விட்டு, விட்டு வெயில் அடித்தது.
வழக்கமாக மழை பெய்யும்போது சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே ரசிப்பதும் உண்டு. தற்போது ஊரடங்கால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிய நிலையில் உள்ளது.
மழை அளவு
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-8.3, நடுவட்டம்-34, கிளன்மார்கன்-9, மசினகுடி-1, கல்லட்டி-2, அவலாஞ்சி-7, கெத்தை-1, கிண்ணக்கொரை-4, அப்பர்பவானி-18, குன்னூர்-3, கேத்தி-4, எடப்பள்ளி-11, கோத்தகிரி-24, கீழ்கோத்தகிரி-31, கூடலூர்-43, தேவாலா-127, அப்பர் கூடலூர்-35, ஓவேலி-39, செருமுள்ளி-95, பாடான்தொரை-89, பந்தலூர்-118, சேரங்கோடு-17 என மொத்தம் 723.3 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 24.94 மில்லி மீட்டர் ஆகும்.
சேறும், சகதியுமாக...
பருவமழை தீவிரம் அடைந்தால் அணைகளில் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஊட்டியில் பெய்த மழையால் ஏ.டி.சி. காந்தி மைதானத்தில் செயல்பட்டு வரும் திறந்தவெளி சந்தையில் தண்ணீர் தேங்கியது.
காய்கறிகளை ஏற்றி, இறக்க சரக்கு வாகனங்கள் சென்று வந்ததால் மைதானம் சேறும், சகதியுமாக மாறியது. இருபுறங்களிலும் கடைகள், நடுவில் தண்ணீருடன் கூடிய சேறு என காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்ததோடு, சுற்றி சென்று பொருட்களை வாங்கி சென்றார்கள்.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
இதேபோன்று கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாண்டியாறு, சோலாடி, பொன்னானி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய விளைநிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.மேலும் கோழிப்பாலம் பகுதியில் தடுப்புச்சுவர் இடிந்தது. புளியாம்பாராவில் மண் சரிவு ஏற்பட்டு, அங்குள்ள பாலம் சேதம் அடையும் நிலையில் உள்ளது. பந்தலூர் தாலுகாவில் பெய்த பலத்த மழையால் நெலாக்கோட்டை-கரியசோலை சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. ஒருசில இடங்களில் மண் சரிவு மற்றும் தடுப்புச்சுவர் இடிந்ததால் வீடுகள் சேதம் அடையும் அபாயம் நிலவுகிறது.
இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
Related Tags :
Next Story