எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுவோர் தங்குவதற்கு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகள் 11-ந்தேதி திறப்பு ; கலெக்டர் மலர்விழி தகவல்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளன. எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகள் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
தர்மபுரி,
2019-2020-ம் கல்வியாண்டில் இந்த விடுதிகளில் தங்கி படித்து வந்த மாணவ-மாணவிகளில் பொதுத்தேர்வு எழுத உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த விடுதிகளை தினமும் காலை, மாலையில் சுத்தம் செய்யவும், விடுதியில் தங்கும் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பத்தை தெர்மல் ஸ்கேனர் மூலம் இருவேளையும் பரிசோதிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாணவ-மாணவிகள் விடுதிகளில் சோப்பு, கிருமிநாசினி ஆகியவற்றை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் உணவு சாப்பிட செல்வதற்கு முன்பும், தேர்வு எழுதி முடித்து விடுதிக்கு திரும்பும்போதும் கைகளை சோப்பு, கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும்.
இதேபோல் விடுதிகளில் தங்கும் மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்திருப்பதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் விடுதி காப்பாளர்கள், காப்பாளினிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவ-மாணவிகளுக்கு விடுதிகளில் தனியாக இடம் ஒதுக்க வேண்டும். இதேபோல் விடுதிகளில் தங்கும் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story