25 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
திண்டுக்கல்,
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறன் கொண்டவர்களும் வாழ்வில் முன்னேறும் வகையில் அவர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மூன்று சக்கர ஸ்கூட்டர் போன்றவை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பயண அட்டை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story