மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலி ; அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்
நாமக்கல்லில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் ஆரம்பகால பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுவரும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அன்றாட பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதில் உள்ள சிரமங்களை போக்கி அவர்கள் சரியாகவும், வசதியாகவும் அமர்ந்து கொள்ள ஏதுவாகவும், அவர்களின் முதுகு பகுதிகளை நேராக கால்களை சரியான அமர்வு நிலையில் வைத்துக்கொள்ளவும் உதவும் சிறப்பு நாற்காலிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 14 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகளை அமைச்சர்கள் வழங்கினர். மேலும் கொரோனா நோய் தொற்றினை தடுக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் 10 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உடல் வெப்ப அளவை ‘இன்ப்ராரெட்’ மூலம் கண்டறிய தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் 10 கருவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதேபோல் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கேடயங்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் உள்பட பல்வேறு உதவி உபகரணங்களையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத்துணைதலைவர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ஜான்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 45 லட்சம் முககவசம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதல்கட்டமாக 2 லட்சம் முககவசம் வழங்கப்பட்டு விட்டன. மேலும் 10 மாவட்டங்களில் 100 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள மாவட்டங்களிலும் ஒரு வாரத்திற்குள் வினியோகம் செய்யப்பட்டு விடும். காது கேட்காத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் 1 லட்சம் முக கவசங்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story