சின்னத்திரை நடிகை தற்கொலை வழக்கில் தலைமறைவான காதலன் சிக்கமகளூருவில் கைது திருமணம் செய்வதாக கூறி ரூ.5 லட்சம் பறித்தவர்


சின்னத்திரை நடிகை தற்கொலை வழக்கில் தலைமறைவான காதலன் சிக்கமகளூருவில் கைது திருமணம் செய்வதாக கூறி ரூ.5 லட்சம் பறித்தவர்
x
தினத்தந்தி 8 Jun 2020 6:35 AM IST (Updated: 8 Jun 2020 6:35 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சின்னத்திரை நடிகை தற்கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த காதலனை சிக்கமகளூருவில் வைத்து போலீசார் கைது செய்தார்கள். திருமணம் செய்வதாக கூறி நடிகையிடம் அவர் ரூ.5 லட்சம் பறித்திருந்தார்.

பெங்களூரு,

பெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி லே-அவுட்டில் வசித்து வந்தவர் சந்தனா (வயது 29). நடிகையான இவர், சின்னத்திரையில் நடித்து வந்தார். சில விளம்பரங்களிலும் சந்தனா நடித்துள்ளார். தினேஷ் என்பவரை சந்தனா காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் (மே) 28-ந் தேதி தனது வீட்டில் விஷத்தை குடித்துவிட்டு நடிகை சந்தனா தற்கொலை செய்து கொண்டார். அவர் விஷம் குடிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார்.

மேலும் தனது தற்கொலைக்கு காதலன் தினேஷ் தான் காரணம் என்று அந்த வீடியோவில் சந்தனா குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தனா தற்கொலை செய்ததும் தினேஷ் தன்னுடைய குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, தினேசை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தினேஷ் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று தினேசை கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்துள்ளனர். தினேசின் சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் ஆகும். அவர் தனது குடும்பத்துடன் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் தினேஷ் ஊழியராக பணியாற்றுகிறார். தினேசும், சந்தனாவும் 5 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர். சந்தனாவை திருமணம் செய்வதாக கூறி இதுவரை ரூ.5 லட்சம் வரை தினேஷ் வாங்கி இருந்தார்.

கடந்த மே மாதம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சந்தனா கூறியுள்ளார். ஆனால் தினேஷ் மறுத்துவிட்டார். மாறாக சந்தனாவிடம் வாங்கிய ரூ.5 லட்சத்தையும் கொடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சந்தனா தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான தினேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story