பேரையூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 3 பேர் பரிதாப சாவு மற்றொரு மகன் உள்பட 5 பேர் படுகாயம்
பேரையூர் அருகே கார் கவிழ்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பேரையூர்,
பேரையூர் அருகே கார் கவிழ்ந்து நடந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குளிக்க சென்றனர்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர்கள் பாரதமுத்து (வயது 21), அனீஷ் என்ற கவுதம்பெருமாள் (21), பாலாஜி (21), சூரியா (21), மகேஷ்பாண்டி (21), பாலகிருஷ்ணன்(21), மணிகண்டபிரபு (23), மணிகண்டன்(21). இவர்கள் அனைவரும் நண்பர்கள். பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள்.
இவர்கள் நேற்று காலையில் டி.கல்லுப்பட்டியில் இருந்து கார் ஒன்றில் சாப்டூர் கேணி வனப்பகுதிக்கு குளிக்க சென்றனர். பின்னர் டி.கல்லுப்பட்டிக்கு காரில் திரும்பி வந்துகொண்டு இருந்தனர்.
சாலையில் கவிழ்ந்தது
இந்த கார் பேரையூர் அருகே உள்ள பழையூர் விலக்கு பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து, உருண்டு ஓடையில் விழுந்தது.
இதில் கார் நொறுங்கியது. காருக்குள் இருந்தவர்கள் உயிருக்கு போராடினார்கள்.
3 பேர் பலி
இதற்கிடையே இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் காரில் இருந்த பாரதமுத்து, பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மற்ற 6 பேரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் அனீஷ் பரிதாபமாக இறந்தார்.
மேலும் காயம் அடைந்த சூரியா, மகேஷ்பாண்டி, பாலகிருஷ்ணன், மணிகண்டபிரபு, மணிகண்டன் ஆகியோருக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் மகன்
இதற்கிடையே இந்த விபத்து பற்றி அறிந்த பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா ஆகியோர் விரைந்து சென்று விசாரித்தனர். விபத்தில் பலியான அனீஷ், பேரையூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் மாரிமுத்து மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மணிகண்ட பிரபுவும் மாரிமுத்துவின் மகன் ஆவார்.
பலியான பாரதமுத்து, பாலாஜி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அனீஷ் உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் டி.கல்லுப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story