போலீஸ்காரர் உள்பட 8 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 487 ஆக உயர்வு


போலீஸ்காரர் உள்பட 8 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 487 ஆக உயர்வு
x
தினத்தந்தி 8 Jun 2020 8:06 AM IST (Updated: 8 Jun 2020 8:06 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 487 ஆக உயர்ந்தது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருவோரால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 479 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

அதாவது, சென்னையில் போலீஸ்காரராக இருக்கும் அவர் கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட தனது சொந்த ஊரான ஒரத்தூருக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதேபோல் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 21 வயது மளிகைக்கடை ஊழியருக்கும், மராட்டிய மாநிலத்தில் இருந்து வடலூருக்கு வந்த 3 பேர், சென்னையில் இருந்து கடலூர் முதுநகர் வந்த கணவன், மனைவி, புதுப்பேட்டை புதுநகரை சேர்ந்த 55 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 487 ஆக உயர்ந்தது. நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஏற்கனவே சென்னை, அரியலூரை சேர்ந்த 3 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 445 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 பேர் மட்டும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இது வரை 12 ஆயிரத்து 612 பேருக்கு பரிசோதனை செய்ததில், 487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 11 ஆயிரத்து 968 பேருக்கு பாதிப்பு இல்லை. 157 பேரின் முடிவுகள் வர வேண்டும். நேற்று 122 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 279 பேரின் முடிவுகள் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அவர்கள் வசித்த பகுதிகளுக்கு வெளிநபர்கள் செல்வதை தடுக்க ஏதுவாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story