புதுமடம் அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியவர் கைது
புதுமடம் அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்தில் 12 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பள்ளிக்கூடத்தை பார்வையிடுவதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் டேனியல் வந்திருந்தார். அவர் பள்ளி வளாகத்தை சுற்றிப்பார்த்த போது அங்கு பொருத்தப்பட்டிருந்த 6 சி.சி.டி.வி. கேமராக்கள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது அறைக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் 2 நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் கம்புடன் நடந்து சென்றுள்ளது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து இதுகுறித்து புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், மற்றும் அப்பகுதியை சேர்ந்த பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். அவர்கள் அந்த காட்சியை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டனர். அதன் பின்னர் தலைமை ஆசிரியர் டேனியல் இதுகுறித்து உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் சந்த் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் யாசர் மவுலானா மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது புதுமடத்தை சேர்ந்த அரூஸ்கனி, இர்சாத் அகமது ஆகியோர் என்பதை விசாரணையின் மூலம் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிந்து அரூஸ்கனியை கைது செய்து பரமக்குடி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள இர்சாத் அகமதுவை தேடி வருகின்றனர்.
புகார்
இதுகுறித்து தலைமை ஆசிரியர் டேனியலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:- புதுமடம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளியில் 6 கேமராக்கள் உடைக்கப்பட்டு உள்ளன. உடனடியாக அந்த நபர்களை ஊராட்சி தலைவர் மற்றும் கிராம பிரமுகர்களை அழைத்து அடையாளம் கண்டறியப்பட்டு உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story