பேச்சுவார்த்தையில் உடன்பாடு: திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம் ஒத்திவைப்பு ஜி-கார்னரில் வழக்கம் போல் வியாபாரம் நடைபெறும்


பேச்சுவார்த்தையில் உடன்பாடு: திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம் ஒத்திவைப்பு ஜி-கார்னரில் வழக்கம் போல் வியாபாரம் நடைபெறும்
x
தினத்தந்தி 8 Jun 2020 11:09 AM IST (Updated: 8 Jun 2020 11:09 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கம்போல, ஜி-கார்னரில் வியாபாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி மூடப்பட்டு தற்போது காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் நடந்து வருகிறது.

இந்த இடம் திறந்த வெளி மைதானமாக இருப்பதால் மழை பெய்யும்போது காய்கறிகள் சேதம் அடைந்து விடுவதாக கூறியும், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என கூறியும் காந்தி மார்க்கெட்டை ஜூன் 7-ந் தேதிக்குள் திறப்பதற்கான அறிவிப்பை அதிகாரிகள் வெளியிடவில்லை என்றால் அன்று இரவு முதல் காலவரையின்றி காய்கறிகள் வியாபாரத்தை நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும் என காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில், இந்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் வியாபார சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமையில், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வியாபாரிகள் தரப்பில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு உள்பட 27 வியாபார சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் கோவிந்தராஜூலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இம்மாத இறுதிக்குள் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விடும் என்பதால் வருகிற 30-ந்தேதி முதல் காந்தி மார்க்கெட்டை திறந்து வியாபாரம் செய்ய அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. நாளை(இன்று) முதல் வழக்கம் போல் வியாபாரம் நடைபெறும்’ என்றார்.

கடைகள் அமைப்பு

இதற்கிடையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையை சேர்ந்த மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் ஜி-கார்னரில் நேற்று இரவு கடைகள் அமைத்து இருந்தனர். இதனால், இன்று திருச்சி நகரில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் மத்தியில் நிலவிய அச்சத்திற்கு இடம் இல்லாமல் போய்விட்டது.

Next Story