அரசு உத்தரவு எதிரொலி: 74 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் ஊரடங்கு கால அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்
அரசு உத்தரவை தொடர்ந்து 74 நாட்களுக்கு பிறகு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். அவர்கள் ஊரடங்கு கால அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
கோவை,
உலகையே மிரட்டும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கானது பல்வேறு கட்டங்களாக வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இந்த ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு முன்பே தொடங்கியதால் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. அத்துடன் பிளஸ்-1 பொதுத்தேர்வில் இறுதி தேர்வான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்கள் தவிர அனைத்து பாடங்களுக்கான தேர்வுகளும் முடிந்தது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 இறுதி பாடங்களுக்கான தேர்வு கடந்த 1-ந் தேதி தொடங்க இருப்பதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு மத்தியில் தேர்வு நடத்தக்கூடாது என்று பெற்றோர், பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வருகிற 15-ந் தேதி தேர்வு தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. அத்துடன் இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சில யோசனைகளையும் அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த தேர்வுக்கான பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர்
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 இறுதி பாடங்களுக்கான தேர்வு மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே நடக்கிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 540 பள்ளிகள் மையங்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.இதையடுத்து கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க மேல் நிலைப்பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும் 74 நாட்களுக்கு பிறகு நேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அப்போது அவர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
தயார்படுத்தும் பணிகள்
தொடர்ந்து பயோமெட்ரிக் வருகை பதிவேடுவுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர். பின்னர் நீண்டநாட்களுக்கு பிறகு சக ஆசிரியர்களை சந்தித்ததால் கொரோனா ஊரடங்கில் ஏற்பட்ட அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
தொடர்ந்து தேர்வு அறையில் கிருமிநாசினி தெளித்து, தயார்படுத்தும் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர். இதுதவிர தேர்வுக்கான ஹால் டிக்கெட் வாங்குவதற்காக பள்ளிக்கு வந்து இருந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஹால் டிக்கெட் வழங்கினர்.
Related Tags :
Next Story