கோவை மாவட்டத்திற்கு ‘இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ அதிகாரிகள் எச்சரிக்கை
கோவை மாவட்டத்திற்கு இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கோவை,
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கோவை உள்பட 7 மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என்றாலும் அதற்கு வெளியில் இருந்து வரும் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளதால் வெளியூர்களில் இருந்து குறிப்பாக சென்னையில் இருந்து வருபவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. கார் மற்றும் ரெயில் மூலம் வருபவர்களின் வீடுகளுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் சென்று அவர்களின் சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்புகிறார்கள்.
விமானத்தில் வருபவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டு அவர்கள் ஒரு நாள் கண்காணிப்பு மையத்தில் வைக்கப்படுகிறார்கள். இவர்களில் தொற்று உறுதியானால் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்கள். இல்லையென்றால் அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில் கோவைக்கு பலர் இ-பாஸ் இல்லாமல் வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து கூறியதாவது:-
கைது நடவடிக்கை
கோவைக்கு விமானம், ரெயில் மற்றும் வாகனங்களில் சாலைகள் வழியாக வருபவர்களின் பட்டியல் சுகாதாரத்துறைக்கு கிடைத்து விடுகிறது. ஆனால் இ-பாஸ் இல்லாமல் சரக்கு வாகனங்களில் மறைந்து பலர் கோவைக்கு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சென்னை மற்றும் டெல்லி, குஜராத், மராட்டியம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் இல்லாமல் வருவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 269-ன் கீழ்(தொற்று நோயை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு உதவி செய்தல்) கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளியூர்களில் இருந்து இ-பாஸ் பெற்று கோவைக்கு வருபவர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா உறுதியானால் வசதியானவர்களாக இருந்தால் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். தனி அறை இல்லாமல் வசதி இல்லை என்றால் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா உறுதியாகாதவர்கள் வீடுகளிலோ, அரசு கண்காணிப்பு மையங்களிலோ 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
Related Tags :
Next Story