நீலகிரி மாவட்டத்தில் சுழற்சி முறையில் 400 ஓட்டல்கள் திறப்பு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட்டனர்


நீலகிரி மாவட்டத்தில் சுழற்சி முறையில் 400 ஓட்டல்கள் திறப்பு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட்டனர்
x
தினத்தந்தி 9 Jun 2020 5:17 AM IST (Updated: 9 Jun 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் சுழற்சி முறையில் 400 ஓட்டல்கள் திறக்கப்பட்டன. அங்கு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பெரிய, நடுத்தர, சிறிய ஓட்டல்கள், டீக்கடைகள் மூடப்பட்டன. அதனால் உரிமையாளர்கள், வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளை நம்பி செயல்பட்டு வந்த பெரிய ஓட்டல்கள் மாத வாடகை கட்ட முடியாத நிலைக்கு சென்றது. இதற்கிடையே ஓட்டல்கள், டீக்கடைகளில் கூட்டம் சேராமல் பார்சல் வழங்கி செயல்பட அரசு அனுமதித்தது. இருந்தாலும், ஓட்டல்களில் வியாபாரம் போதுமான அளவு இல்லை. இதனால் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. எனவே ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

400 ஓட்டல்கள் திறப்பு

அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஓட்டல்கள், டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் சுழற்சி முறையில் 400 ஓட்டல்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள ஓட்டல்கள் முன்பு கைகளை தொடாமல் காலால் அழுத்தி கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன் பின்னரே வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு வந்தவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே போடப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து சாப்பிட்டனர்.

கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். மேஜை, இருக்கைகள் 1 மீட்டர் இடைவெளியில் வரிசையாக அமைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், குறைந்த வாடிக்கையாளர்களே உணவகங்களுக்கு வந்தனர். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியே நடக்கும் வியாபாரம் தற்போது மந்தமாக உள்ளது.

வியாபாரம் பாதிப்பு

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் முகமது ஜாபர் கூறும்போது, ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளாக குறைக்கப்பட்டு உள்ளது. பணிபுரியும் ஊழியர்களும் குறைக்கப்பட்டு உள்ளனர். சாப்பாட்டில் ரசம், கூட்டு, பாயாசம் ஆகியவை சேர்க்கப்படவில்லை. இதனால் ரூ.100-க்கு விற்ற சாப்பாடு ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உணவு விலை உயர்த்தப்பட வில்லை. நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வரவில்லை. மேலும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால், வெளியிடங்களில் இருந்து மக்கள் வருவது இல்லை. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஓட்டல்களுக்கு வரி செலுத்துவது போன்றவற்றில் சலுகை வழங்க வேண்டும் என்றார்.

Next Story