மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் அமைச்சர் காமராஜ் அடிக்கல் நாட்டினார்


மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் அமைச்சர் காமராஜ் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 9 Jun 2020 5:19 AM IST (Updated: 9 Jun 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

உள்ளிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

மன்னார்குடி, 

மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழா

மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.1 கோடியே 72 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் நகரசபை முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.கே.கலியபெருமாள், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடும் நடவடிக்கை

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேஷன் கடைகளுக்கு வரும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மூட்டைகளில் பொருட்களின் எடை குறைவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை. ரேஷன் கடைகளுக்கு வரும் அத்தியாவசிய பொருட்களின் மூட்டைகளில் பொருட்களின் அளவு குறைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு காலத்தில் எந்தவித தட்டுப்பாடும் இன்றி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து ரக அரிசிகள்

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 23 லட்சத்து 71 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல், தமிழகம் முழுவதிலும் உள்ள 450 அரவை முகவர்கள் மூலம் அரவை செய்யப்பட்டு அரிசியானது பொது வினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் ரகங்களில் மோட்டா ரகமும் அடங்கும். ஆதலால் ரேஷன் கடைகளில் வினியோகிக்கும் அரிசிகளில் மோட்டா ரகமும் உள்ளது. சன்ன ரக அரிசி, மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் அரிசியும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. தற்போது மோட்டா ரகமாக மட்டுமல்லாமல் சன்ன ரகம் உள்ளிட்ட அனைத்து ரக அரிசிகளும் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரேஷன் கடை திறப்பு

இதேபோல் திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சியில் ரூ.8 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் கலெக்டர் ஆனந்த், கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story