கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறப்பு ஒத்திவைப்பு


கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 9 Jun 2020 5:45 AM IST (Updated: 9 Jun 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம்,

கொரோனா தொற்று காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில் புராதன சின்னங்களை திறக்கலாம் என்று மத்திய கலாசாரத்துறை அறிவித்து உள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இம்மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் நேற்று திறக்கப்படவில்லை.

இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. எப்போது திறக்கப்படும் என அறிவிக்காமலேயே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் புராதன சின்னங்களின் உள்பகுதி வெறிச்சோடியே காணப்பட்டது. அங்கு தொல்லியல் துறையின் பாதுகாவலர்கள் மட்டுமே துப்பாக்கி ஏந்திய நிலையில் புராதன நினைவுச்சின்ன பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கொரோனா தொற்று குறைந்த பிறகு மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி புராதன சின்னங்களை திறந்து சுற்றுலா பயணிகள் அங்குள்ள சிற்பங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story