பழனி ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பழனி ரெயில் நிலையம் முன்பு  ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2020 6:01 AM IST (Updated: 9 Jun 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

பழனி ரெயில்நிலையம் முன்பு ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழனி, 

பழனி ரெயில்நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மதுரை கோட்ட உபதலைவர் கார்த்திக் சங்கிலி தலைமை தாங்கினார். மாவட்ட சி.ஐ.டி.யூ. பொருளாளர் மனோகரன், மாவட்ட துணைத்தலைவர்கள் மோகனா, பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ள பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. அரசு ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றக்கூடாது. மக்கள் அனைவருக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் திண்டுக்கல் செயலாளர் காட்டுராஜா நன்றி கூறினார்.

இதேபோல் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் பழனி கிளை சார்பில் ரெயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் பழனி கிளை செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாசர்தீன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ரெயில்வேயை தனியாருக்கு விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story