எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: ஆர்வத்துடன் ‘ஹால் டிக்கெட்’ பெற்று சென்ற மாணவ-மாணவிகள்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: ஆர்வத்துடன் ‘ஹால் டிக்கெட்’ பெற்று சென்ற மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 9 Jun 2020 1:02 AM GMT (Updated: 9 Jun 2020 1:02 AM GMT)

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், திண்டுக்கல்லில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் ‘ஹால் டிக்கெட்’களை வாங்கி சென்றனர்.

திண்டுக்கல், 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் ஒத்தி வைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையும், கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்-1 தேர்வு வருகிற 16-ந்தேதியும், மார்ச் மாதம் 24-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில், ஊரடங்கு காரணமாக பங்கேற்க முடியாத மாணவ-மாணவிகளுக்கு வருகிற 18-ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்தது.

‘ஹால் டிக்கெட்’

இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கான ‘ஹால் டிக்கெட்டு’கள் நேற்று திண்டுக்கல்லில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் வழங்கப்பட்டது. 2 மாதங்களாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த மாணவ-மாணவிகள் இந்த தகவலை அறிந்ததும் உற்சாகமடைந்தனர். மேலும் அவர்கள் நேற்று காலை 8 மணி முதலே தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று, தங்களது நண்பர்களிடம் விடுமுறையில் ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசி மகிழ்ந்தனர். இதற்கிடையே அவர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ மற்றும் முக கவசம் வழங்கும் பணி தொடங்கியது. இதில், பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகளுக்கு ‘ஹால் டிக்கெட்’ மற்றும் முக கவசங்களை வழங்கினர். அவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பெற்று சென்றனர்.

பரிசோதனை

முன்னதாக பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பள்ளி அலுவலர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி வழங்கினர். அதன் மூலம் கைகளை சுத்தப்படுத்திக்கொண்ட பின்னரே ‘ஹால் டிக்கெட்டு’களை வாங்க மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி ‘ஹால் டிக்கெட்டு’களை வாங்கி சென்றனர்.

Next Story