நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடல் அடக்கம் - கன்னட திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி


நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடல் அடக்கம் - கன்னட திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
x
தினத்தந்தி 9 Jun 2020 6:47 AM IST (Updated: 9 Jun 2020 6:47 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கன்னட திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. நடிகர் அர்ஜூனின் மிக நெருங்கிய உறவினரான அவர், கன்னடத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக பெங்களூரு ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

39 வயதே ஆன அவரது மரணத்தால் கன்னட திரையுலகம் சோக கடலில் மூழ்கியுள்ளது. அவரது உடல் பசவனகுடியில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மனைவி அனிதா குமாரசாமி, நடிகர் அர்ஜூன், கன்னட திரையுலகை சேர்ந்த தர்ஷன், சிவராஜ்குமார், உபேந்திரா, ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார், துனியா விஜய், சுதீப், நடிகைகள் தாரா, சுமலதா உள்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது ரசிகர்களும் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு அவரது உடலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கனகபுரா ரோட்டில் உள்ள பண்ணை வீட்டு தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஒக்கலிக சமூக முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது மனைவி மேக்னா ராஜ், கணவரின் நெற்றியில் உணர்வுப்பூர்வமாக முத்தமிட்டு நிரந்தரமாக அனுப்பி வைத்தார்.

இது காண்போரை கண் கலங்க வைத்தது. அவரது மனைவி மேக்னா ராஜூம் நடிகை ஆவார். கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர். அவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். பசவனகுடியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவர் கணவரின் உடல் அருகே சோகமே உருவாக கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தார்.

பசவனகுடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் பெரும்பாலானவர்கள் முக்கவசம் அணிந்து வந்திருந்தனர். ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால், அங்கு தனிமனித விலகல் என்பது பின்பற்ற முடியாத நிலை இருந்தது.

கணவரின் பூத உடலை கட்டித்தழுவி முத்தமிட்டு பிரியாவை விடை கொடுத்த நடிகை மேக்னாராஜ்

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது இழப்பால் அவரது காதல் மனைவியும், நடிகையுமான மேக்னாராஜ் மனம் உடைந்து போய் விட்டார். தனது கணவரின் இறப்பு பற்றி கேள்வி பட்டதும் மேக்னாராஜ் கதறி அழுதபடி இருந்தார். அவரை அவரது பெற்றோரும், குடும்பத்தினரும் ஆறுதல் படுத்தியபடி இருந்தனர்.

ஆனால் அவர் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுதபடி இருந்தார். நேற்று காலையும் அவரது உடல் அருகில் அமர்ந்திருந்த மேக்னாராஜ் தனது கணவரின் முகத்தை பார்த்தபடி சொல்லொண்ணா துயரத்தில் கண்களில் நீர்வழியாக வெறித்து பார்த்தபடி இருந்தார். அவ்வப்போது அவர் தனது கணவரின் உடல் அருகில் சென்று தொட்டு தொட்டு பார்த்து அழுதார். அவரை அவரது மைத்துனரும், இயக்குனருமான துருவ் சர்ஜா ஆசுவாசப்படுத்தினார். மேலும் குடிக்க தண்ணீர் கொடுத்தார். மேலும் மிகுந்த சோகத்தில் இருந்த மேக்னாராஜ் டீ, தண்ணீர் குடிக்க மறுத்தார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி தண்ணீர் கொடுத்தனர்.

பின்னர் சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் சொந்த ஊரான ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே நெலுகுலி கிராமத்தில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. அப்போது மேக்னாராஜ் தனது காதல் கணவரின் உடலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பிரியாவிடை கொடுத்தார். அப்போது தழுதழுத்த குரலில் மேக்னா ராஜ் என்னை விட்டு சென்றுவிட்டீர்களே என கூறியடி கதறி அழுதது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் என்னை விட்டு செல்லக் கூடாது எனக் கூறி
சிரஞ்சீவி சர்ஜாவின் உடலை அடக்கம் செய்ய நிலம் கொடுத்த பாசக்கார தம்பி
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் அவரது சொந்த ஊரான துமகூரு மாவட்டம் மதுகிரியில் அடக்கம் செய்ய முதலில் ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் தனது அண்ணன் மரணமடைந்துவிட்டார். அவர் என்னை விட்டு செல்லக் கூடாது எனக் கூறி அவரது தம்பியும், இயக்குனருமான துருவ் சர்ஜா தனது குடும்பத்தினரிடம் கூறினார். மேலும் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே நெலுகுலி கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் அண்ணன் சிரஞ்சீவி சர்ஜா உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படி சிரஞ்சீவி சர்ஜாவின் உடலை நெலுகுலி கிராமத்தில் உள்ள பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட திரையுலகின் இளம்நடிகரான சிரஞ்சீவி சர்ஜா (வயது 39) நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு அவரது காதல் மனைவியும், நடிகையுமான மேக்னாராஜ் மற்றும் குடும்பத்தினர், கன்னட திரையுலகினரை கடும் துயரில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த சிரஞ்சீவி சர்ஜா, நாய்களை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். அவருக்கு மறைந்த நடிகர் அம்பரீஷ் ஒரு நாயை பரிசாக அளித்திருந்தார். அந்த நாய்க்கு துரோணா என பெயர் சூட்டி சிரஞ்சீவி சர்ஜா சீராட்டி, பாராட்டி வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்துவிட்டதால், அவரை காண முடியாமல் அவரது வளர்ப்பு நாய் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் அவரது வீட்டுக்கு வந்தவர்கள் கண்ணீரும், கம்பலையுமாக இருப்பதை பார்த்த அந்த வளர்ப்பு நாய் கண்ணீர்விட்டபடி துயரத்தில் மூழ்கியுள்ளது. உணவு கொடுத்தாலும் அதை சாப்பிடாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்ப்பமாக இருக்கும் மேக்னாராஜூக்கு குழந்தை பொம்மையை பரிசளித்த சிரஞ்சீவி சர்ஜா

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவும், நடிகை மேக்னாராஜூம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 2018-ம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது மேக்னாராஜ் 6 மாத கர்ப்பமாக உள்ளார். தனக்கு குழந்தை பிறக்க இருப்பதை நினைத்து சிரஞ்சீவி சர்ஜா மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் கர்ப்பிணியான தனது மனைவியை அவர் கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு அவர் குழந்தை பொம்மை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அந்த பொம்மையை மேக்னாராஜ் தனது கையிலேயே வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் சிரஞ்சீவி சர்ஜா நேற்று முன்தினம் மரணமடைந்து விட்டார். தனது குழந்தை பிறப்பதற்கு முன்பு அவர் மறைந்துவிட்டதை நினைத்து மேக்னாராஜூவும், அவரது குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் மேக்னாராஜூம் தனது கணவர் தனக்கு இறுதியாக பரிசளித்த அந்த குழந்தை பொம்மையை தனது அருகில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story