கம்பம் அருகே யானைகள் பலியான இடத்தில் மின்கோபுரங்களை உயர்த்தும் திட்டம் முடக்கம் மீண்டும் வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம்
கம்பம் அருகே மின்சாரம் பாய்ந்து யானைகள் பலியான இடத்தில் மின்கோபுரங்களை உயர்த்தும் திட்டம் முடங்கி கிடக்கிறது. இதனால், மீண்டும் வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
கம்பம்,
தேனி மாவட்டம், மேகமலை வன உயிரின சரணாலயத்தில் கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்பட்ட வென்னியாறு பகுதியில் சுருளியாறு மின் நிலையத்தில் இருந்து கயத்தாறுக்கு கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் இந்த மின்கம்பிகளில் உரசி கடந்த சில ஆண்டுகளாக யானைகள் உயிரிழந்து வருகின்றன.
மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதை தடுப்பது குறித்து வனத்துறை முதன்மை செயலர், தமிழக மின்வாரிய தலைவருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய முடிவெடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இதனால், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை மற்றும் மின்வாரியத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் மின் கம்பிகளை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மின்கோபுரங்கள்
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரங்கள் உயரம் குறைவாக உள்ளதால் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால், யானைகள் அந்த வழியாக நடந்து செல்லும் போது அவை உரசி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மின்கம்பிகளை உயர்த்தும் வகையில், மின்கோபுரங்களை உயர்த்தி அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த தனியார் மின்கோபுரம் அமைக்கும் நிறுவனத்தின் மூலம் இந்த வனப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. பின்னர், ரூ.1 கோடியே 50 லட்சத்தில் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை அந்த திட்டப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த திட்டம் முடங்கிக் கிடப்பதால், மின்கம்பிகளில் உரசி யானைகள் மீண்டும் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த திட்டப் பணிகளை விரைவில் நடைமுறைப்படுத்தி உயர்கோபுரங்கள் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story