நவிமும்பையில் தொழில் போட்டியில் கட்டுமான அதிபரை சுட்டுக் கொன்ற 3 பேர் கைது


நவிமும்பையில் தொழில் போட்டியில் கட்டுமான அதிபரை சுட்டுக் கொன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2020 7:11 AM IST (Updated: 9 Jun 2020 7:11 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் தொழில் போட்டியில் கட்டுமான அதிபரை சுட்டுக் கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

நவிமும்பை ரபாலே பகுதியில் கடந்த 4-ந் தேதி அன்று கட்டுமான அதிபர் பிரவின் தாய்டே (வயது35) என்பவர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கட்டுமான அதிபரையும், அவரது நண்பரையும் சரமாரியாக சுட்டனர். இதில் குண்டு துளைத்தில் பிரவின் தாய்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரபாலே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில், கொலையாளிகள் பயன்படுத்திய கார் கோபர்கைர்னே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த காரை கைப்பற்றினர். பின்னர் நடத்திய விசாரணையில், தொழில் போட்டி காரணமாக ஜெயேஷ் பாட்டீல் (37) என்பவரின் தூண்டுதலின் பேரில் சந்தோஷ் டோரா (22), தேவேந்திர மாலி (22) ஆகியோர் கட்டுமான அதிபரை சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கார்கர் பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

Next Story