3-ம் கட்ட தளர்வுகள்: பெஸ்ட் பஸ் சேவை தொடக்கம் மும்பையில் தனியார் அலுவலகங்கள் திறப்பு - முதல் நாளிலேயே போக்குவரத்து நெரிசல்


3-ம் கட்ட தளர்வுகள்: பெஸ்ட் பஸ் சேவை தொடக்கம் மும்பையில் தனியார் அலுவலகங்கள் திறப்பு - முதல் நாளிலேயே போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 9 Jun 2020 7:31 AM IST (Updated: 9 Jun 2020 7:31 AM IST)
t-max-icont-min-icon

3-ம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வந்ததை அடுத்து மும்பையில் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. தனியார் அலுவலக ஊழியர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன் போன்றவர்களுக்காக பெஸ்ட் பஸ் சேவை தொடங்கப்பட்டது. தளர்வின் முதல் நாளிலேயே சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மும்பை,

கொரோனா பிரச்சினை காரணமாக மும்பையில் மார்ச் 22-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போது இந்த ஊரடங்கு 5-வது முறையாக ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஊரடங்கு தளர்வின் போது மாநில அரசு 3 கட்ட தளர்வுகளை அறிவித்தது. இதன்படி ஏற்கனவே மும்பையில் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆட்டோ, டாக்சிகள் இயங்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. வணிக வளாகங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் கடைகளும் திறக்கப்பட்டன. 15 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. எலெக்ட்ரீசியன், பிளம்பர்கள் வேலைக்கு செல்ல தொடங்கினர். இந்தநிலையில் நேற்று 3-ம் கட்ட தளர்வாக மும்பையில் 10 சதவீத ஊழியர்களுடன் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இந்த தனியார் அலுவலக ஊழியர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன் போன்ற விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்காக பெஸ்ட் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் சுமார் 75 நாட்களுக்கு பிறகு மும்பை சுறுசுறுப்பாக காணப்பட்டது.

மேலும் பெஸ்ட் பஸ்சுக்காக விக்ேராலி, பாண்டுப், தானே, மலாடு உள்ளிட்ட பல இடங்களில் பஸ் நிறுத்தங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். சில இடங்களில் மணிக்கணக்கில் காத்திருந்த மக்கள் பஸ் வந்தவுடன் சமூக இடைவௌியை காற்றில் பறக்கவிட்டு அடித்துபிடித்து பஸ்களில் ஏறினர். இருக்கையில் 25 பேரும், நின்றபடி 5 பேரும் பயணிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டம் அதிகம் வந்ததால், அந்த விதிமுறையை பின்பற்ற முடியாமல் போனது. மேலும் பயணிகள் சிரமத்தை அனுபவிக்க நேர்ந்தது. இதுகுறித்து காட்கோபரை சோ்ந்த அக்லாக் கான் கூறுகையில், ‘‘நான் காவலாளியாக வேலை பார்க்கிறேன். இன்று தான் 2 மாதங்களுக்கு பிறகு வேலைக்கு செல்கிறேன். காட்கோபரில் இருந்து முல்லுண்டு செல்வதற்காக 40 நிமிடமாக பஸ்சுக்காக காத்திருக்கிறேன். பல பஸ்களில் இடமில்லை’’ என்றார்.

தனியார் நிறுவன ஊழியர்கள் செல்ல வசதியாக அதிக பெஸ்ட் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அத்தியாவசிய சேவை மற்றும் சுகாதார பணியாளர்களுக்காக ஏற்கனவே மும்பையில் 1,800 பெஸ்ட் பஸ் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் தனியார் அலுவலக ஊழியர்களுக்காக கூடுதலாக 250 பெஸ்ட் பஸ்கள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மும்பையில் தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ள பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ், லோயர் பரேல், அந்தேரி, சாந்தாகுருஸ் போன்ற மேற்கு புறநகர் பகுதிகள், பவாய் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

முதல் நாளிலேயே பலர் அலுவலகங்கள் செல்ல வாகனங்களில் படையெடுத்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காந்திவிலி முதல் அந்தேரி வரையிலான மேற்குவிரைவு சாலை, தென்மும்பையில் உள்ள பாபாசாகிப் அம்பேத்கர் ரோடு, எல்.பி.எஸ். ரோடு, எஸ்.வி. ரோடு, நவிமும்பை, முல்லுண்டு, பன்வெல் சுங்கச்சாவடி பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மும்பை தவிர தானே, நவிமும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நேற்று முதல் மாநில அரசு அறிவித்த தளர்வுகள் அமலுக்கு வந்து உள்ளன.

Next Story