மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நூதன முறையில் மனு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்
நெல்லை அருகே மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நூதன முறையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை அருகே மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நூதன முறையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நூதன முறையில் மனு
கொரோனா ஊரடங்கால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தாவிட்டாலும், திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனுக்களை அளித்து வருகிறார்கள்.
இதையொட்டி நேற்று தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின் மற்றும் முன்னீர்பள்ளம், மேலக்கருங்குளம் பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மதுபாட்டில்களை சணலில் வரிசையாக தோரணம் போல் கட்டிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் முன்பு வரிசையாக நின்று கோஷம் போட்டனர். இதைக்கண்ட போலீசார், மதுபாட்டில் உள்ளே இருப்பதை சோதனை செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர்கள் உள்ளே கடுங்காப்பி ஊற்றி வைத்திருப்பதாக கூறினார்கள். இருந்த போதிலும் போலீசார் ஒரு பாட்டிலை திறந்து அதில் இருந்த திரவத்தை பரிசோதனை செய்தனர். அப்போது அது கடுங்காப்பி என்பது உறுதியானது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
மதுக்கடை அகற்றம்
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் அருகில் ஆரைக்குளம் -ஜோதிபுரம் இடையே டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இந்த கடையானது ஆதிதிராவிடர் நலத்துறையால் நிலமில்லாத மக்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச பட்டா நிலத்தில் அமைந்துள்ளதாக அறிகிறோம். இது ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான சட்டவிரோத செயல் ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த மதுக்கடை குடியிருப்புக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
எனவே முறையான விசாரணை நடத்தி மதுக்கடை அமைத்த அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதிக்குள் அமைந்துள்ள கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.
தார் ரோடு மோசம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், இணை செயலாளர் துரைப்பாண்டியன், பாளையங்கோட்டை ஒன்றிய இளைஞர் அணி தலைவர் யாபேஸ் பாண்டியன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டியில் இருந்து ஆச்சிமடம் வரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்ரோடு போடப்பட்டது. ஆனால் இந்த ரோட்டில் 3 நாட்களுக்குள் ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகிறது. மக்கள் ரோட்டை பயன்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. தரமற்ற முறையில் போடப்பட்ட தார் ரோட்டை ஆய்வு செய்து, அங்கு மீண்டும் தரமான ரோடு அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ் தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு கட்சி கொடிகளுடன் வந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் கொடுத்த மனுவில், “மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் துறைகளிலும், சிறப்பு கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்“ என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
வள்ளியூரை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி அவ்வையார் என்பவர் கொடுத்த மனுவில், “என்னுடைய கணவர் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார். அவரது ஓட்டலை சேதப்படுத்தியது தொடர்பாக 2015-ம் ஆண்டு வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வள்ளியூர் போலீசார் வழக்கை முடித்து விட்டதாக அறிவித்து விட்டனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறிஉள்ளார்.
இதே போல் அம்பை அருகே உள்ள கீழவைராவிகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மக்கள், கொரோனாவால் தாங்கள் வாங்கிய கடனுக்கான தவணை தொகை வசூலிப்பதை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story