தூய்மை பணியாளர்களை வழிநடத்தும் விவகாரம்: மாநகராட்சி, நகராட்சிகள் நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்


தூய்மை பணியாளர்களை வழிநடத்தும் விவகாரம்:   மாநகராட்சி, நகராட்சிகள் நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை   மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2020 8:22 AM IST (Updated: 9 Jun 2020 8:22 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களை வழிநடத்தும் விவகாரம் தொடர்பாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை, 

கன்னியாகுமரி மாவட்டம் லூயி தூய்மை தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சுலிப், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அரசு மருத்துவமனை, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு முக கவசம், கை உறைகள், கிருமிநாசினி போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால் இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தூய்மை பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு செய்ய வேண்டும். இவற்றை முறையாக வழங்கும்படி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும், ஆயுள் காப்பீட்டையும் முறையாக வழங்க உத்தரவிட வேண்டும். தூய்மை பணியாளர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவும் வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பாராட்டு

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தனர். அப்போது மதுரை மாநகராட்சியின் நகர பொறியாளர் அரசு ஆஜராகி, “மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், கழிவுநீர் அகற்றும் பணியாளர்களுக்கு கால்களில் அணியும் ஷூ வழங்கப்பட்டு உள்ளது. அதை அணிவதில் அவர்களுக்கு சில நேரங்களில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோல அனைத்து பணியாளர்களுக்கும் உரிய உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு உபகரணங்களை அணிய தவறும்பட்சத்தில் தூய்மை பணி கண்காணிப்பாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து தற்போது வரை மதுரை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் நாகர்கோவில் நகராட்சி அதிகாரி ஒருவரும் ஆஜராகி, அங்கு தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கியது குறித்து நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

அரசு வக்கீல் தகவல்

பின்னர் தமிழக அரசின் வக்கீல் ஆஜராகி, “மதுரை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் போல மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளும் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது” என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story