ராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி கொலையில் 2 பேர் கைது


ராஜபாளையம் அருகே   கட்டிட தொழிலாளி கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2020 8:44 AM IST (Updated: 9 Jun 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தளவாய்புரம், 

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 28). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை நடந்த மறுநாள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், தாசில்தார் ஆனந்தராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடித்து விடுவதாக உறுதியளித்தனர்.

2 பேர் கைது

இதற்கிடையே இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட கட்டிட தொழிலாளி இசக்கிமுத்து திருமணத்துக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த காளஸ்வரி என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை இசக்கிமுத்துவின் நண்பர் கோட்டை(27) என்பவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் காளஸ்வரிக்கு தொடர்ந்து இசக்கிமுத்து தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி தனது கணவர் கோட்டையிடம் அவர் முறையிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கோட்டை அவரது நண்பர் அட்டகத்தி கணேசன்(35) ஆகிய இருவரும் சேர்ந்து, இசக்கிமுத்துவை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

Next Story