நெல்லை, தென்காசியில் அனைத்து ஓட்டல்களும் திறப்பு சமூக இடைவெளியுடன் அமர்ந்து வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டனர்


நெல்லை, தென்காசியில் அனைத்து ஓட்டல்களும் திறப்பு சமூக இடைவெளியுடன் அமர்ந்து வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டனர்
x
தினத்தந்தி 9 Jun 2020 9:01 AM IST (Updated: 9 Jun 2020 9:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் நேற்று முதல் அனைத்து ஓட்டல்களும் திறக்கப்பட்டன. அங்கு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

நெல்லை, 

நெல்லை, தென்காசியில் நேற்று முதல் அனைத்து ஓட்டல்களும் திறக்கப்பட்டன. அங்கு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

அமர்ந்து சாப்பிட அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதையொட்டி ஓட்டல்கள், டீக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பின்னர் டீக்கடைகள், ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டது. இதையொட்டி ஓட்டல்களில் உள்ளே யாரையும் அனுமதிக்காமல் வாசலில் வாடிக்கையாளரை நிறுத்தி பார்சல் சாப்பாடு மட்டும் வழங்கினர். இந்த நிலையில் தமிழக அரசு அனுமதிப்படி நேற்று முதல் அனைத்து ஓட்டல்களும் முழுமையாக திறக்கப்பட்டன.

ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் உள்ளே சென்று சமூக இடைவெளியுடன் காலை உணவு, மதியம் சாப்பாடு மற்றும் இரவு உணவு சாப்பிட்டனர். நெல்லையில் சந்திப்பு, வண்ணார்பேட்டை, டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள சிறியது முதல் பெரியது வரை அனைத்து ஓட்டல்களும் திறக்கப்பட்டன. ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ கருவி கொண்டு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. அதன்பிறகு கிருமி நாசினி திரவம் கையில் தெளிக்கப்பட்ட பிறகே ஓட்டலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு சமூக இடைவெளி விட்டு உணவருந்திவிட்டு சென்றார்கள்.

கிருமிகள் அழிப்பு

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகி ரெங்கபிரசாத் கூறியதாவது:-

கொரோனாவால் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓட்டல்களை திறந்து உள்ளோம். ஓட்டல் ஊழியர்கள் கையுறை, முககவசம் அணிந்து மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஓட்டலுக்கு வருகிற வாடிக்கையாளர்களுக்கு அரசு உத்தரவுப்படி தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை, கை கழுவுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உள்ளே 4 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய மேஜையில் 2 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டு உள்ளது.

நெல்லை மாநகரில் 20 பெரிய ஓட்டல்கள் உள்ளன. அங்கு ஊழியர்கள் அனைவரும் கையுறை, முககவசம் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சாப்பிடுவதற்கு முன்பு மேஜைகளில் ஸ்பிரே அடித்து கிருமிகள் அழிக்கப்படுகிறது. சாப்பிட்டதற்கு உரிய பணத்தை நேரடியாக பெறாமல் தட்டில் வைக்கச் சொல்லி உள்ளோம். அதனை கையுறை அணிந்த ஊழியர் சேகரிப்பார். ஆன்லைன் மூலம் சாப்பாட்டுக்கு பணம் செலுத்தும் முறையை அதிகமாக செயல்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று முதல் அனைத்து பெரிய ஓட்டல்களும் திறக்கப்பட்டன. அங்கு சமூக இடைவெளியுடன் அமர்ந்து வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டனர். 4 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய மேஜையில் 2 பேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக அவர்களுக்கு கை கழுவும் திரவம் கொடுக்கப்பட்டது. அதன்மூலம் அவர்கள் கைகளை கழுவிவிட்டு உள்ளே சென்றனர். மேலும் ஓட்டலின் வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்ப நிலையும் பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story