2 நகராட்சிகளை நிர்வகிக்கும் விருதுநகர் கமிஷனர் சென்னை கொரோனா பணிக்கு நியமனம் உள்ளூரில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு


2 நகராட்சிகளை நிர்வகிக்கும்   விருதுநகர் கமிஷனர் சென்னை கொரோனா பணிக்கு நியமனம்   உள்ளூரில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 9 Jun 2020 9:06 AM IST (Updated: 9 Jun 2020 9:06 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சி பொறுப்பை கவனிக்கும் கமிஷனர் பார்த்தசாரதி, சென்னை தாம்பரம் கொரோனா தடுப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் இங்குள்ள நகராட்சி பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

விருதுநகர், 

விருதுநகர் நகராட்சி கமிஷனராக இருப்பவர் பார்த்தசாரதி. இவர் அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். தற்போது உள்ள நிலையில் நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கோடைக்கால குடிநீர் பிரச்சினையும் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.

மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் தற்போது உள்ள நிலையில் 2 வாரங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை இருந்து வருகிறது.

தடுப்பு நடவடிக்கை

மேலும் நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி கமிஷனர் கண்காணிக்க வேண்டிய நிலையில் உள்ளார். விருதுநகர் நகராட்சி பகுதியிலும் அதனையொட்டி உள்ள கருப்பசாமிநகர், அல்லம்பட்டி, புல்லலக்கோட்டை பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

மேலும் அருப்புக்கோட்டை பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.

பாதிக்கும்

இந்தநிலையில் கமிஷனர் பார்த்தசாரதி சென்னை தாம்பரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் உத்தரவுப்படி சென்னையில் பணியை தொடங்கி உள்ளார். முதல்கட்டமாக 10 நாட்கள் அவர் அந்த பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நீட்டிக்கப்படுமா? என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. 10 நாட்கள் பணி முடிந்து திரும்பினாலும் விதிமுறைப்படி தனிமைப்படுத்தும் நடைமுறைகளை முடிப்பதற்கு மேலும் சில தினங்கள் ஆகும் நிலை உள்ளது.

இதனால் விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், குடிநீர் வினியோக பணிகளிலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் 2 நகராட்சி நிர்வாக பணிகளிலும் தொய்வு ஏற்படும். எனவே நகராட்சி நிர்வாக ஆணையர், வட மாவட்டங்களில் உள்ள சிறிய நகராட்சி கமிஷனர்களை சென்னையில் கொரோனா சிறப்பு பணிக்கு நியமிக்கலாம். 2 நகராட்சிகளை கவனிக்கும் கமிஷனரை சிறப்பு பணிக்கு அனுப்பி வைத்துள்ளதால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாக ஆணையர் இந்த ஏற்பாட்டில் உரிய மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story