திருவெறும்பூர் அருகே ஜெனரேட்டரை இயக்கியவர் மின்சாரம் பாய்ந்து சாவு


திருவெறும்பூர் அருகே ஜெனரேட்டரை இயக்கியவர் மின்சாரம் பாய்ந்து சாவு
x
தினத்தந்தி 9 Jun 2020 9:24 AM IST (Updated: 9 Jun 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே ஜெனரேட்டரை இயக்கியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

துவாக்குடி, 

திருவெறும்பூர் அருகே ஜெனரேட்டரை இயக்கியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சாரம் பாய்ந்தது

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி நாராயண நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது 49). இவர், சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் மின்சாரம் இல்லாததால் அங்குள்ள ஒருவரது வீட்டில் ஜெனரேட்டர் உதவியுடன் தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது தடைபட்ட மின்சாரம் திடீரென வந்தது.

அதனைத்தொடர்ந்து ஜெனரேட்டரை நிறுத்தும்படி கூறியுள்ளனர். அதன்படி, ஸ்ரீதர் ஜெனரேட்டரை நிறுத்தியபோது எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறி உள்ளனர்.

சாவு

அதன்படி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீதரின் மனைவி பிரியா, நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேன் டிரைவர் தற்கொலை

* திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணவேணிநகரை சேர்ந்தவர் மைதீன்பாஷா(40). வேன் டிரைவரான இவருக்கு கடந்த சில நாட்களாக வேலை இல்லாததால் விரக்தியில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் தொட்டிக்குள் ஆண் பிணம்

* திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி வளாகத்தில் உள்ள ஒரு சிறிய தொட்டிக்குள் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர், ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதியில் சுற்றித் திரிந்தவர் என்று கூறப்படுகிறது. அவரது உடலை கண்டோன்மெண்ட் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம்(33). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் கணினி திரையை(மானிட்டர்) மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் தகராறு

* துறையூரை அடுத்த நாகலாபுரத்தை சேர்ந்தவர் மலர்க்கொடி (40). இவர், நேற்று வீட்டில் இருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த அதே ஊரை சேர்ந்த இன்பராஜ்(20), மணிராஜ் (20), குமாரவேல் (19), மாதேஷ்(21), விசுவா (21) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து, வாலிபர்கள் 5 பேரையும் கைது செய்தார்.

Next Story