மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் சிகிச்சை அளிக்க வசதி உள்ளது கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் சிகிச்சை அளிக்க வசதி உள்ளது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2020 9:41 AM IST (Updated: 9 Jun 2020 9:41 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் சிகிச்சை அளிக்க வசதி உள்ளது என்று கலெக்டர் சிவராசு கூறினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் சிகிச்சை அளிக்க வசதி உள்ளது என்று கலெக்டர் சிவராசு கூறினார்.

இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

14 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116. இவர்களில் 86 பேர் ஏற்கனவே பூரண குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். இன்று (நேற்று) 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் மற்றும் பெரம்பலூர் அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உள்பட 26 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் 350 பேர் வரை அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியும். நமது மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு ஆயிரம் பேர் அல்லது அதற்கு மேல் அதிகரித்தாலும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக திருச்சிக்கு அனுப்பி வைப்பதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.

வேண்டுகோள்

பொதுமக்கள் முடிந்த அளவு வெளியில் தேவை இல்லாமல் சுற்றி திரிவதை தவிர்க்க வேண்டும். முககவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. கடைகளில் பொருட்கள் வாங்கும்போது சமூக விலகலை கடைபிடித்து கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story